clear
clear
clear
x

18. வெஃகாமை

செவ்வாய்க்கிழமை, மார்ச் 9, 2004, 16:50[IST]

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

(171)

விளக்கம்:

நடுவுநிலைமை இல்லாமல், பிறந்து நல்ல பொருளைக் கவர்வதற்கு நினைத்தால், அவன் குடும்பம் கெட்டுப்போவதுடன், அவனுக்கு என்றும் அழியாத குற்றமும் வந்து சேரும்.


படுபயன் வெஃகி வழிபடுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.

(172)

விளக்கம்:

நடுவுநிலைமை தவறுவதற்கு வெட்கப்படுகிறவர்கள், கவர்தலால் வந்தடையும் பயனை விரும்பிப் பழியான சொல்களைச் செய்யவே மாட்டார்கள்.


சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

(173)

விளக்கம்:

நிலையான இன்பத்தை விரும்புகிறவர்கள், கவரும் பொருளால் வரும் சிறிய இன்பத்தை விரும்பி, அறன் அல்லாத செயல்களைச் செய்ய மனம் விரும்ப மாட்டார்கள்.


இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

(174)

விளக்கம்:

ஐம்புலன்களையும் வென்ற குறையில்லாத அறிவாளர்கள், 'யாம் பொருளில்லாதேம்' என்ற வறுமை நிலையிலும் பிறர் பொருளைக் கவர விரும்பமாட்டார்கள்.


அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

(175)

விளக்கம்:

ஒருவன் எவரிடத்திலிருந்தும் பொருளைக் கவர நினைத்துப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமாகவும் விரிவானதாகவும் வளர்ந்த அவனது அறிவால் ஏதும் பயனில்லை.


அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

(176)

விளக்கம்:

அருளை விரும்பி நல்லொழுக்கத்திலே நிலைத்து நின்றவன்,பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயல்களைச் செய்ய நினைத்தால், கெட்டுப் போய் விடுவான்.


வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் வினைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன்.

(177)

விளக்கம்:

பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வதால் வரும் ஆக்கத்தை எவருமே விரும்பவேண்டாம்; செயல் அளவில் அதன்பயன் நன்மையாவது என்பது எப்போதும் அரிதாகும்.


அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

(178)

விளக்கம்:

ஒருவனது செல்வ வளம் குறையாமல் இருப்பதற்குரிய வழி யாதென்றால், அவன் பிறன் பொருளைக் கவர விரும்பாதிருத்தலே ஆகும்.


அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்து ஆங்கே திரு.

(179)

விளக்கம்:

அறத்தை அறிந்து, பிறன் பொருளைக் கவர விரும்பாத அறிவுடையாரை,திருமகள், தான் சேர்வதற்குரிய திறன் தெரிந்து சென்று அடைவாள்.


இறவீனும் எண்ணாது வெஃகின் விறவீனும்
வேண்டாமை என்னும் செருக்கு.

(180)


விளக்கம்:

வரும் துன்பத்தை நினையாமல் பிறர் பொருளைக் கவர விரும்பினால், அது கெடுதலைத் தரும்; அதனை விரும்பாதிருத்தல் என்னும் பெருமையே வெற்றியைத் தரும்.

Previous

அதிகாரங்கள்

Next



படைப்புகளை அனுப்ப:



கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களது ஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@thatstamil.com



படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.


User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!