காரைக்கால்: இன்று (26ம் தேதி) சனிப் பெயர்ச்சி நடைபெற்றது. சனி பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்தார்.
இதையொட்டி காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் நடக்கும் சிறப்புப் பூஜைகளில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
நவ கிரகங்களில் ஒன்றான சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பார்.
இந்த ஆண்டு இன்று (சனிக்கிழமை) மாலை 3.27 மணிக்கு சனிப் பெயர்ச்சி நடைபெற்றது. சனி பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்தார்.
இதையொட்டி திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் உள்ள சனீஸ்வர பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனைகள் நடந்தன.
இதையொட்டி நேற்று முதலே பக்தர்கள் திருநள்ளாறில் குவியத் தொடங்கினர்.
சனிப் பெயர்ச்சி நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு, உஷகால பூஜை, காலசந்தி, உச்சி கால பூஜைகள் நடத்தப்பட்டன.
சனிப் பெயர்ச்சி நேரத்தில் தங்க அலங்கார ஆசனத்தில் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பக்தர்கள் நளன் குளத்தில் நீராடிவிட்டு, கறுப்பு வஸ்திரம், நீல நிற மலர்களால் அர்ச்சனை செய்து பகவானை வழிபடுட்டு வருகின்றனர். தங்கக் காக வாகன தெய்வத்தையும் வணங்கினர்.
இந்த நிகழ்வையொட்டி தமிழகம், புதுச்சேரி, கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் திருநள்ளாறுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.