clear
clear
clear
x

பெட்ரோல்...திரும்பி வந்துட்டீங்களாப்பா...!!!

புதன்கிழமை, செப்டம்பர் 17, 2008, 11:10[IST]

-ஏ.கே.கான்

யூக வர்த்தகத்தால் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலையை கண்ணை மூடிக் கொண்டு ஏற்றிவிட்ட அமெரிக்கா, இங்கிலாந்தின் முன்னணி நிதி நிறுவனங்கள் பெரும் சிக்கலில் தவித்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை தானாகவே சரிய ஆரம்பித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் பேரல் 35 டாலர் இருந்த கச்சா எண்ணெய்யின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன் 142 டாலரைத் தொட்டது. இதற்கு எண்ணெய் உற்பத்தி குறைந்ததோ அல்லது தேவை அதிகரித்ததோ காரணமில்லை.

அமெரிக்க-பிரிட்டிஷ் முன்னணி பங்கு நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு கச்சா எண்ணெய் மீது யூக (Speculative trading) நடத்தி விலையை கூட்டிவிட்டன.

இந்த விலை உயர்வால் பல நாடுகளில் பெட்ரோலிய பொருட்கள் விற்பனை படுத்தது, குறிப்பாக அமெரிக்காவில். இதனால் சர்வதேச சந்தையில் உபரி எண்ணெய் குவியவே வாங்க ஆளில்லாமல் தானாகவே விலை குறைய ஆரம்பித்தது.

இந் நிலையில் தான் வந்தது அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் 'பொருளாதார சுனாமி'. உலகின் முன்னணி நிதி நிறுவனங்களான மெரில் லின்ஜ், லேமேன் பிரதர்ஸ் ஆகியவை அடுத்தடுத்து மூழ்க ஆரம்பிக்கவே, இந்த நிறுவனங்களும், இவர்களைப் போலவே மேலும் சில நிறுவனங்களும் நடத்தி வந்த யூக வியாபாரமும் ஓரளவுக்கு ஓய ஆரம்பித்துவிட்டது.

இதையடுத்து பெட்ரோலிய எண்ணெய் விலை சடார் என சரிய ஆரம்பித்துள்ளது. விலை குறைந்து வரும் வேகத்தைப் பார்த்தால், சில முன்னணி புரோக்கர் நிறுவனங்கள் பெட்ரோலிய எண்ணெய் வர்த்தகத்தை அப்படியே பாதியில் விட்டுவிட்டு ஓடிவிட்டதாகத் தெரிகிறது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

இதனால், இரண்டு மாதங்களுக்கு முன் பேரலுக்கு 142 டாலராக இருந்த பெட்ரோலிய எண்ணெயின் விலை நேற்று 92 டாலராகக் குறைந்துவிட்டது.

ஆனாலும் விலை குறைவு நீடிக்குமா என்பது சந்தேகமே. காரணம், உற்பத்தியை குறைக்க முடிவு செய்துவிட்டன OPEC எனப்படும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள். கூடவே ரஷ்யாவும் இவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு உற்பத்தியை குறைக்க முடிவு செய்துவிட்டது.

சில மாதங்களுக்கு முன் வரலாறு காணாத விலையை பெட்ரோலிய எண்ணெய் தொட்டபோது, இந்தியா உள்பட உலக நாடுகள் ஜெட்டாவுக்கு ஓடின. விலையை குறைக்கும் வகையில் பெட்ரோலிய உற்பத்தியை அதிகரிக்குமாறு கோரின.

விலை உயர்வுக்கு உற்பத்தி குறைந்தத காரணமல்ல என்று விளக்கம் தந்த செளதி தலைமையிலான OPEC நாடுகள், உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று, குறிப்பாக அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, உற்பத்தியை அதிகரித்தன.

இப்போது பல யூக வர்த்தக புரோக்கர் நிறுவனங்களின் ஓட்டத்தால் விலை குறைய ஆரம்பித்துவிட்டதால், தங்களது பொருளாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள உற்பத்தியை மீ்ண்டும் பழைய நிலைக்கே குறைத்துவிட OPEC நாடுகள் முடிவு செய்துவிட்டன. செளதி உள்பட சில நாடுகள் தவிர்த்து மற்ற நாடுகள் உற்பத்தி குறைப்பை உடனடியாகவே ஆரம்பித்துவிட்டன.

இதனால் அடுத்து வரும் சில மாதங்களில் 5,20,000 பேரல்கள் அளவுக்கு பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தி குறையவுள்ளது. இதனால் என்ன ஆகும்?. மீண்டும் விலை உயரும்!

விலை குறைப்பா.. தியோரா ஓட்டம்:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கூடியபோது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசு இப்போது விலை குறைந்துவிட்டதால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.

ஆனால், இம்முறை OPEC புண்ணியத்தால் கச்சா எண்ணனெய் விலை எப்போது வேண்டுமானாலும் உயரலாம் என்பதால், இப்போதைக்கு பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிவிட்டார் பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா.

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 67 டாலராக குறைந்தால் வேண்டுமானால், அதுவரை விலை குறைப்பு பற்றி யாருமே பேசாதீர்கள் என்கிறார்.

அவர் பயப்படுவதைப் போலவே இன்று காலை சர்வதேச வர்த்தக சந்தைகளில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை 1 முதல் 3 டாலர் வரை அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் பொருளாதார சுனாமியில் தப்பியுள்ள சில நிறுவனங்கள் நடத்தி வரும் யூக வியாபாரம் தான் என்கிறார்கள்.

விலையை ஏற்றிவிட அவர்கள் இப்போது சொல்லும் காரணம், ''OPEC உற்பத்தியை குறைக்க ஆரம்பித்துவிட்டது' என்பது.

அதுக்குள்ள திரும்பி வந்துட்டீங்களாப்பா...!!!

(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: sribabu
பதிவு செய்தது: 25 Sep 2008 10:24 pm
editor, why dont u publish news about news about Heart donor ( Late.Hithendran)

பதிவு செய்தவர்: Jayakrishnan
பதிவு செய்தது: 17 Sep 2008 1:09 pm
sari appo idhuku enna thaan mudivu
பதிவு செய்தவர்: இரகு
பதிவு செய்தது: 17 Sep 2008 7:52 pm
பெற்றோலிய வர்த்தகத்தில் நாட்டாண்மையாகச் செயல்படும் அமெரிக்காவை வெளியேற்ற வேண்டும். சதாம் இருந்தவரை அமெரிக்காவால் பெற்றோல் வர்த்தகத்தில் விலைகளை நினைத்தபடி மாற்ற முடியவில்லை. அதானால்த் தான் சதாமை அழித்து உலகின் பெற்றோல் உற்பத்தியில் இரண்டாவதாக உள்ள அவரது நாட்டின் உற்பத்திகளையும் அமெரிக்கா தனக்கக் கீழ் கொண்டு வந்து டாலர் பெறுமதி குறையும் போதெல்லாம் பெற்றோலால் விலையைக் கூட்டி விளையாடுகின்றது. இதற்கு OPEC இல் பழியைப் போட்டு தனது திருகுதாளங்களை மறைக்கப் பார்க்கின்றது.

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!