கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் பெரும் வெற்றி பெற்ற மலையாளத்தின் மணிச்சித்ரதாழு, தமிழில் சந்திரமுகியாக வெளியாகி வெற்றிக் கொடி நாட்டியது.
பி.வாசுவே இரு படங்களையும் இயக்கினார். மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரை கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன் செய்தார். தமிழில் ரஜினிகாந்த் நடித்தார்.
மலையாளத்தில் ஷோபனா செய்த கேரக்டரை கன்னடத்தில் செளந்தர்யா அசத்தினார், தமிழில் ஜோதிகா பயமுறுத்தினார்.
இப்போது ஆப்தமித்ராவின் 2ம் பாகத்தை ஆப்தரக்ஷா என்ற பெயரில் உருவாக்கி வருகிறார் பி.வாசு. இப்படத்தில் சினேகா நடிக்கிறார். அத்தோடு, விமலா ராமனும் படத்தில் இருக்கிறார்.
சினேகாவை விட விமலா ராமனுக்குத்தான் பவர்புல் கேரக்டராம். அதாவது கன்னடத்தில் செளந்தர்யா நடித்தது, தமிழில் ஜோதிகா நடித்தது. இப்போது 2ம் பாகத்தி்ல் விமலா ராமன் அந்த கேரக்டரை செய்கிறாராம்.
இந்தப் படம் தனக்கு பெரிய அளவில் பெயர் வாங்கித் தரும் என்று புளகாங்கிதத்துடன் கூறுகிறார் விமலா ராமன். இதுகுறித்து அவர் கூறுகையில், இப்படத்தின் முதல் பாகமான ஆப்தமித்ரா, சந்திரமுகி படங்களை பார்த்தேன்.
இதுபோல் ஒரு வேடம் கிடைக்காதா என்று ஏங்கினேன். தற்போது அது தீர்ந்துள்ளது. முதல்பாகத்தில் நாக வள்ளி கேரக்டரில் செளந்தர்யா நடித்திருந்தார். அவர் ஏற்ற வேடத்தை இப்போது ஏற்றிருக்கிறேன்.
நாகவள்ளி சாதாரண கேரக்டர் இல்லை. எல்லாப் படங்களிலும் இதுபோன்ற கேரக்டர் வராது. அப்படி ஒரு கேரக்டர் அது. அதில் முழுமையாக நான் மூழ்கி விட்டேன் என்கிறார்.