சந்திரமுகி 2-ம் பாகத்துக்கான ஸ்க்ரிப்ட் வோலைகளை முடித்துவிட்ட இயக்குநர் பி.வாசு, இப்போது அதை கன்னடத்தில் இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்.
கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ஆப்தமித்ரா. விஷ்ணுவர்தன் நடித்த இந்தப் படம் 500 நாட்கள் ஒடியது. இந்தப் படம்தான் சூப்ப்ர ஸ்டார் ரஜினி நடிக்க தமிழில் சந்திரமுகியாக வெளிவந்து சரித்திரம் படைத்தது. 870 நாட்கள் ஓடி தென்னிந்திய சினிமாவில் புது சாதனைப் படைத்தது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக வாசு ஆரம்பத்திலிருந்தே கூறிவந்தார். ஆனால் ரஜினி அதுபற்றி எதுவும் கூறவில்லை.
இப்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தை கன்னடத்தில் ஆரம்பித்துள்ளார் பி.வாசு.
இதுகுறித்து வாசு கூறியதாவது:கடந்த 4 வருடத்துக்கு முன்பு கன்னடத்தில் ஆப்தமித்ரா படத்தை இயக்கினேன். அந்தப்படத்தின் சாதனையும், அதன் தமிழ் பதிப்பின் சாதனைகளையும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்நிலையில் ஆப்தமித்ரா படத்தின் 2-ம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட்டை உருவாக்கி வந்தேன். அந்த வேலை இப்போது முடிந்துவிட்டது. பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறோம். விஷ்ணுவர்தனே மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்தப் படம் தமிழில் சந்திரமுகி 2ம் பாகமாக வருமா என்று நிறைய பேர் கேட்டுவிட்டார்கள். அது என்கையில் இல்லை. அதை முடிவு செய்ய வேண்டியவர் சூப்பர்ஸ்டார்தான். முதலில் கன்னடப் படத்தை முடிக்கிறேன் என்றார் வாசு.