லக்னோ: தலைமை ஆசிரியரின் பர்ஸில் இருந்து ரூ.200 காணாமல் போனதால் உத்தரப் பிரதேசத்தில் தொடக்கப் பள்ளி ஒன்றில் 200 மாணவ-மாணவிகள் 10 மணி நேரம் வகுப்பறைகளில் அடைக்கப்பட்டனர்.
உத்திர பிரதேசம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ளது ஜிர்ஹா கிராமம். இங்குள்ள தொடக்கப் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை ஆசிரியரின் பர்ஸில் இருந்து ரூ.200 தொலைந்துவிட்டது. மாணவர்கள்தான் எடுத்திருக்க வேண்டும், தண்டனை கொடுத்தால் உண்மையை சொல்லி விடுவார்கள் என்று நினைத்த தலைமை ஆசிரியர் பள்ளியில் உள்ள 200 குழந்தைகளையும் வகுப்பறைகளில் வைத்து பூட்ட உத்தரவிட்டார்.
இதை செவ்வனே செய்து முடித்தனர் ஆசிரியர்கள். 5 முதல் 10 வரையிலான குழந்தைகள், தண்ணீர், சாப்பாடு இன்றி 10 மணிநேரம் சிறிய அறைக்குள் அடைக்கப்பட்டனர். குழந்தைகளை அழைத்து செல்வதற்காக மாலையில் வந்த பெற்றோருக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது.
ஆத்திரமடைந்த பெற்றோர்கள் வகுப்பறைகளின் கதவு, ஜன்னல்கள், வென்டிலேட்டர் என்று உடைத்து உள்ளே இருந்த தங்களது குழந்தைகளை மீட்டனர். காற்றோட்டம், நீர் ஆகாரம் இன்றி குழந்தைகள் மிகவும் வாடி போயிருந்தனர். இந்த சம்பவம் குழந்தைகளை பெரிதும் பாதித்திருப்பது அவர்களின் முகத்தில் தெரிந்துள்ளது.
இதில் 12 குழந்தைகள் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். இதனால் ஆவேசமடைந்த பெற்றோர் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதுகுறித்து கல்வி அதிகாரி சித்திக் நேற்று விசாரணை மேற்கொண்டார்.
அவர் கூறுகையில், குழந்தைகளுக்கு மதிய உணவு கூட வழங்காமல் இம்சித்துள்ளனர். குழந்தைகளை அடித்ததாக புகார் எதுவும் வரவில்லை. இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.