ஹைதராபாத்: சத்யம் நிறுவனத்தின் பெயர் மஹிந்திரா சத்யம் என மாற்றப்பட்டுள்ளது. வர்த்தகத்தை சரியான முறையில், புதிய வேகத்துடன் எடுத்துச் செல்லவே இந்தப் பெயர் மாற்றம் என அறிவித்துள்ளது மஹிந்திரா நிறுவனம்.
இனி மஹிந்திரா நிறுவன அடையாளச் சின்னமே (லோகோ - logo) சத்யத்துக்கும் பயன்படுத்தப்படும்.
ராமலிங்க ராஜுவால் நிறுவப்பட்ட சத்யம் நிறுவனம், மோசடிப் புகார் மற்றும் நேர்மையின்மைக்காக ஆட்டம் கண்டு, அடியோடு மூடப்படும் சூழலில், டெக்மஹிந்திரா நிறுவனம் அதை ஏலத்தில் எடுத்தது.
ஆனாலும் அதன் சர்வதேச வாடிக்கையாளரகள் பலர் வேறு நிறுவனங்களை நாடத் துவங்கினர். டெக் மஹிந்திரா எதிர்பார்த்த அளவு வர்த்தகமும் நடைபெறவில்லை.
சத்யம் நிறுவனத்தின் மோசடி இமேஜை மாற்ற விரும்பிய டெக் மஹிந்திரா, பல்வேறு மாறுதல்களைச் செய்து வருகிறது.
இந்த மாறுதல்களை வெளியுலகமும் தெரிந்து கொள்ளும் விதத்தில், சத்யம் நிறுவனத்தின் புகழ்பெற்ற லோகோவை மாற்றிவிட்டது.
மேலும் லோகாவுக்குக் கீழே 'சத்யம் - what business need!' என்று எழுதப்பட்டிருந்தது. இப்போது 'மஹிந்திரா சத்யம்' என்ற புதிய லோகோ மட்டுமே இடம்பெற்றுள்ளது.
"சத்யம் நிறுவனத்தின் மீட்சியை உலகுக்கு அறிவிக்கும் உத்தியே இந்த புதிய லோகோ. வாடிக்கையர் நலம். உயர்ந்த லட்சியங்கள், உயர்ந்தபட்ச தொழில் தர்மம்... இவைதான் மஹிந்திரா குழுமத்தின் நோக்கங்கள். இனி இவை சத்யம் நிறுவனத்தில் நோக்கங்களாகவும் தொடரும்..." என்றார் டெக்மஹிந்திரா குழும நிர்வாக இயக்குநர் மற்றும் துணைத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.
அதேநேரம் சத்யம் நிறுவன லோகோவை மாற்றியதை பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். சத்யம் நிறுவனத்துக்கென்று இதுவரை இருந்த தனித் தன்மையை டெக் மஹிந்திரா சிதைத்துவிட்டதாகவும், இப்போதும் சர்வதேச அரங்கில் சத்யம் நிறுவனத்துக்கு தனி மரியாதை உள்ளதாகவும் ஒரு பிரபல விளம்பர ஆய்வாளர் கருத்து தெரிவித்துள்ளர்.
ஆனால், இன்று பிற்பகல் வரை சத்யம் இணையத் தளத்தில் லோகோ இன்னும் மாறவேயில்லை. என்ன காரணமோ?!.