clear
clear
clear
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
காமராஜர் பிறந்த நாள்-கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்: ரூ. 1.33 கோடி ஒதுக்கீடு

Karunandhi
சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளின்போது தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் கல்வி வளர்ச்சி நாள் விழாவையொட்டி ரூ. 1.33 கோடி நிதியை ஒதுக்கி முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திமுக அரசு 2006-ல் பொறுப்பேற்றதும் பெருந்தலைவர் காமராசர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில், அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15ஆம் தேதியைக் கல்வி வளர்ச்சி நாள் என அறிவித்து, ஆண்டுதோறும் அந்நாளில் தமிழகத் திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ- மாணவியர் புத்தாடை அணிந்து, விழா எடுத்து, காமராசரின் திருவுருவப்படத்தை அலங்கரித்து, மகிழ்ச்சியுடன் கொண்டாடிட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்று முதல்-அமைச்சர் கலைஞர் 24.5.2006 அன்று ஆணையிட்டார்.

அந்த ஆணையைத் தொடர்ந்து, கடந்த மூன்றாண்டுகளாகத் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் என மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டுள்ளது.

அதேபோல, இந்த ஆண்டும் ஜூலை திங்கள் 15ஆம் நாளன்றும் மாணவ- மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும் கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராசரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் “கல்வி வளர்ச்சி நாள் விழா” எழுச்சியுடன் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்காக அரசு நிதி ஒதுக்கீடாக 1 கோடியே 8 லட்சத்து 62 ஆயிரத்து 550 ரூபாயும், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து 24 லட்சத்து 58 ஆயிரத்து 200 ரூபாயும் ஆக மொத்தம் 1 கோடியே 33 லட்சத்து 20 ஆயிரத்து 750 ரூபாய் அனுமதித்து முதல்-அமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு சரத்குமார் கோரிக்கை..


இதற்கிடையே, காமராஜர் பிறந்தநாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,

கல்வித்துறையில் மாபெரும் புரட்சியையும், சீர்திருத்தங்களையும் ஏற்படுத்தி கல்விகண் திறந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.

ஏழை மாணவர்கள் படித்து உயர காரணமாக இருந்த காமராஜர் அனைத்து மாநிலங்களுக்கும் கல்வி புரட்சிக்கு முன்னோடியாக இருந்துள்ளார்.

அவரது பிறந்த நாளான ஜூலை 15-ந்தேதியை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

 
 
  மேலும் செய்திகள்
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்