Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
மீண்டும் சாதி சங்கமாக கூனிக் குறுகும் பாமக-கருணாநிதி

Karunanidhi
சென்னை: சாதி சங்கமாக இருந்து பின்னர் அரசியல் கட்சியாக மாறிய பாமக மீண்டும் ஏன் சாதி சங்கமாக கூனிக் குறுக வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

மேலும் டாக்டர் ராமதாஸ் அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, சில செயல்களை செய்வதால்தான் அவருக்கு இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் முதல்வர் கூறினார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பாமகவினர் நேற்று வெளியேற்றப்பட்டது பற்றி அக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர் பேசுகையில், நேற்று என்னை பேச விட்டிருந்தால் முதல்வர் நல்ல பதிலை சொல்லி இருப்பார். ஆனால் இரு காங்கிரஸ் உறுப்பினர்கள் குறுக்கிட்டு அதைத் தடுத்து விட்டனர் என்று கூறிவிட்டு சில வார்த்தைகளைக் கூறினார்.

இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து, அந்த வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றனர். இதற்கு பாமகவினர் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சலிடவே அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.

அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, நேற்று நடந்த பிரச்சினை பற்றி இனி பேச வேண்டாம் என்றதோடு தொடர்ந்து பாமகவினர் பேச அனுமதி தர மறுத்தார். காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் பேச அனுமதி தந்தார். இதற்கு பாமகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.

அப்போது நடந்த விவாதம்:

ஞானசேகரன்: பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசும்போது 2 காங்கிரஸ் உறுப்பினர்களை குறிப்பிட்டு தவறான வார்த்தைகளைக் கூறினார். காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும், சட்டசபையில் பேச உரிமை உண்டு. ஜி.கே.மணி பேசிய பிரச்சினைக்குரிய வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

சபாநாயகர்: அந்த வார்த்தைகள் நீக்கப்படுகிறது.

ஜி.கே.மணி: அப்படியானால் நேற்று காங்கிரஸ் உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், சுதர்சனம் பேசியதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.

(காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல்)

அமைச்சர் துரைமுருகன்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேசியதற்கும், ஜி.கே.மணி பேசியதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒரு கருத்து பற்றிய விவாதம் நேற்றே முடிந்து விட்டது. பாமகவினர் வெளியே சென்று விட்டனர். அத்தோடு அந்த பிரச்சனை முடிந்துவிட்டது.

ஜி.கே.மணி: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு பற்றிய விவாதத்தை இந்த அவையில் நடத்தலாம் என்று முதல்வர் கூறினார். அதற்கான தேதியை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முதல்வர் கருணாநிதி: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனில் அக்கறை கொண்ட முதல்வர் என்று ஜி.கே.மணி குறிப்பிட்டுள்ளார். ஒரு விவாதத்தை வைத்துக்கொள்ள தேதி சொல்லவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

திமுக ஆட்சி வன்னியர்களுக்கு துரோகம் செய்வது போல ஒரு கற்பனை குற்றச்சாட்டைக் கூறி, அதுபற்றிய படிவங்களை அச்சிட்டு வெளியே வினியோகம் செய்திருக்கிறார்கள்.

திமுக ஆட்சியில் மிகவும் பிற்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் உரிய இடத்தை எந்த அளவு வழங்கியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

தமிழ்நாட்டில் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த ஐஏஎஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் அதிகமாக இல்லை என்று கூறினார்கள். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான தேர்வை மத்திய தேர்வாணையம் நடத்துகிறது. இதுபோல உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதிலும் தமிழக அரசுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை.

மாவட்ட கலெக்டர்களை பொறுத்தவரை தற்போது 2 வன்னியர்கள் இருக்கிறார்கள். ஜெயராமனுக்கு 2வது முறையாக ஆட்சித்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையில் போலீஸ் சூப்பிரண்டுகள் 3 பேர் வன்னியர்கள். அமைச்சர்களில் 3 பேர், துணைவேந்தர்களில் 3 பேர் வன்னியர்கள். தேர்வாணையத்தின் உறுப்பினர் தலைவராக வன்னியர் நியமிக்கப்பட்டுள்ளார். இவற்றை எல்லாம் நியமித்து இருக்கிறோமா? இல்லையா?

காங்கிரஸ் உறுப்பினர்கள் நேற்று இங்கு பேசும்போது மிகவும் கவலையுடன் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார்கள். சாதி பற்றி ஒவ்வொருவரும் பேசும் நிலை ஏற்பட்டால், அதுபற்றிய பிரச்சினையை எழுப்பினால் என்ன ஆவது என்றனர். அந்த கவலையை நானும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒன்றை குறிப்பிடுகிறேன். எந்த ஒரு தனி நபருக்கும், குழுவுக்கும் ஒரு கட்சியை உருவாக்க உரிமை உண்டு. அது சாதி கட்சியாக இருக்கலாம். அதுபற்றி எனக்கு கவலை இல்லை. பாமக முதலில் சாதி சங்கமாக இருந்தது. அப்போதெல்லாம் அவர்களுக்கு அரசியல் கட்சிகளை பிடிக்காது. என்னையும், சட்டசபையில் இருக்கும் உங்களை போன்ற உறுப்பினர்களையும் ஓட்டு பொறுக்கி என்றுதான் சொல்வார்கள்.

'அரசியலே பிடிக்காத' அந்த சாதி சங்கம் பின்னர் அரசியல் கட்சியாக உருவாகியது. அரசியல் கட்சியாக வியாபித்த பிறகு மீண்டும் ஏன் சாதி சங்கமாக கூனிக் குறுக வேண்டும் என்பதுதான் எனது வேதனை.

வன்னியர்களுக்கு இந்த கட்சி எதிரானது என்பது போல பொதுமக்களிடம் பிரசாரம் செய்கிறார்கள். 1969ம் ஆண்டில் என் தலைவர் அண்ணா மறைந்தபோது நான் முதல்வர் ஆனேன். அப்போதே நான் இதே அவையில் பிற்பட்டோர்களுக்கும், மிகவும் பிற்பட்டோர்களுக்கும் தொண்டனாக இருப்பேன் என்று கூறினேன். காரணம் நானே மிக மிக பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவன்.

ஜி.கே.மணிக்கு நான் இதெல்லாம் சொல்ல வேண்டியதில்லை என்றாலும், வன்னியர்களுக்கு விளக்கமளிக்க வேண்டியது எனது கடமையாகும். 1999ம் ஆண்டு 108 சாதிகளை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது. அப்போது நடந்தது திமுக ஆட்சி.

இங்கு ஜி.கே.மணி பேசும் போது 108 சாதியினருக்கு 20 சதவீதம்தானா என்று பேசினார். இந்த 108 சாதியினரின் மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா?. 1 கோடியே 23 லட்சத்து 34 ஆயிரம் பேர்தான். இதில் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் 65 லட்சத்து 4 ஆயிரத்து 855 பேர்.

1957ல் முதன் முதலில் நான் சட்டமன்ற உறுப்பினராக இந்த அவைக்கு நுழைந்தபோது பெருந் தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தார். அப்போது தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருந்த சமூகத்தினரின் பெயர் நாவிதர், மருத்துவர், இசை வேளாளர் என்று பல பெயர்களை குறிப்பிட்டு விட்டு இறுதியில் 'சானான்' என்று போட்டு இருந்தார்கள்.

உடனே நான் எல்லோருக்கும் “ர்” விகுதியில் பெயர்களை குறிப்பிட்டு விட்டு ஒரு சமூகத்துக்கு மட்டும் ஏன் “ன்” விகுதியை போட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அப்போது அந்த துறைக்கு அமைச்சராக இருந்த கக்கன் திடுக்கிட்டார். ஆனால் அமைச்சர் சி.சுப்பிரமணியன் அதில் தவறு இல்லை என்று வாதிட்டார்.

உடனே பெருந்தலைவர் காமராஜர், கக்கனிடம் ஏதோ சொல்ல அவர் திருத்தப்படும் என்று அறிவித்தார். இதில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது தெரியும்.

டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி போன்றவர்கள் வன்னியர்களை திமுக அரசு புறக்கணிப்பது போல கூறுகிறார்கள். மொத்தம் உள்ள பிற்பட்டோரில் வன்னியர்கள் 65 லட்சத்து 4 ஆயிரத்து 855 பேர். சேர்வை போன்ற சமூகத்தினர் 11 லட்சத்து 18 ஆயிரத்து 532 பேர். மற்ற பிரிவினர் 41 லட்சத்து 81 ஆயிரத்து 11 பேர். ஆக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அதிகமான மக்கள் தொகை கொண்ட சமூகம் வன்னியர்கள் தான்.

இன்றைக்கு சமூகநீதி பற்றி பேசுகிற டாக்டர் ராமதாஸ் ஒரு திருமண விழாவில் திமுக வன்னியர்களுக்கு எதிரான கட்சி என்று பிரசாரம் செய்துள்ளார்.

சமூக நீதித் தலைவரான வி.பி.சிங் தமிழ்நாட்டுக்கு வந்தபோது பாமக சார்பில் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் வன்னிய பெண்கள் வீட்டின் வாசலையும், ஜன்னலையும் பூட்டிக் கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று கூறி இருந்தார். வி.பி.சிங் முகத்தில் நீங்கள் முழிக்கக் கூடாது என்று அறிக்கை விட்டார்.

இப்படி அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு செயல்படுவதால்தான் இன்றைய விளைவுகளை அனுபவிக்க நேர்ந்துள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார் கருணாநிதி.

இதையடுத்து ஜி.கே.மணி மீண்டும் எழுந்து, பேச முயன்றார்.

அமைச்சர் அன்பழகன் குறுக்கிட்டு முதல்வர் விளக்கம் அளித்த பிறகு மீண்டும் அந்த பிரச்சனையை எழுப்ப உறுப்பினருக்கு உரிமை இல்லை. சமூக நீதி என்பது நீண்ட காலம் இருக்கும் பிரச்சனைதான். சமூகம் இருக்கும் வரை சமூக நீதி பிரச்சனையும் இருக்கும். எனவே வேறொரு சந்தரப்பத்தில் நீங்கள் பேசலாம் என்றார்.

அதன்பிறகும் ஜி.கே.மணி பேச எழுந்து நிற்க, சபாநாயகர் அனுமதி தரவில்லை.

இதையடுத்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்எல்ஏ கோவை தங்கம் பேசிக்கொண்டிருந்தார். அப்போதும் பாமக உறுப்பினர்கள் நின்றவாறே குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அமைச்சர் துரைமுருகன் எழுந்து "ஒரு தீர்மானத்தின் மீது ஒரு உறுப்பினர் பேசிக்கொண்டு இருக்கும் போது இப்படி மற்றவர்களும் எழுந்து நின்று பேசுவதை அனுமதிக்கக்கூடாது. சபையை நடத்துவது மணியா? இல்லை சபாநாயகரா?. தங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால் பாமகவினர் வெளிநடப்பு செய்யலாம். அல்லது அவர்கள் இதே போன்று தொடர்ந்து நின்றுகொண்டிருந்தால் அவர்களை சபாநாயகர் வெளியேற்றலாம் என்றார்.

இதைத் தொடர்ந்து பாமக உறுப்பினர்கள் கோஷமிட்டவாறே வெளிநடப்பு செய்தனர்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: raj
பதிவு செய்தது: 10 Jul 2009 11:54 am
yappa kaligner உனக்கு வேற velaiye illaya?

பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 10 Jul 2009 10:19 am
அது எப்படி கலைஞர் இவ்வளோ நல்லவரா எப்பவுமே இருக்காரு. எப்பவுமே மத்தவங்க கெட்டவங்கள இருக்காங்களே.

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India