கொல்கத்தா: கடந்த ஒரு வருடமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி ஜெர்மனிக்குக் கொண்டு செல்லப்பட்டு ஸ்டெம் செல் தெரபிக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தாஸ் முன்ஷி. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஆண்டு அக்டோபர் 12ம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு ஸ்டெம் செல் தெரபி சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து அவரது மனைவயும், எம்.பியுமான தீபா தாஸ் முன்ஷி கூறுகையில், ஜெர்மனியில் உள்ள டுஸ்ஸல்டார்ப் நகரில் உள்ள மருத்துவமனையில் எனது கணவருக்கு சிகிச்சை அளிக்கவுள்ளோம். இதற்காக அக்டோபர் 30ம் தேதி ஜெர்மனி கிளம்புகிறோம். 15 நாட்களுக்கு அவருக்கு ஸ்டெம் செல் தெரபி அளிக்கப்படும்.
விரைவில் அவர் குணமடைந்து விடுவார் என ஜெர்மனி டாக்டர்கள் உறுதியளித்துள்ளனர் என்றார்.
முன்ஷியுடன் தீபா, அவரது மைத்துனர் ஆசிம், 2 டாக்டர்கள் ஆகியோரும் ஜெர்மனிக்கு செல்லவுள்ளனர்.