Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
திமுக கூட்டணியில் இப்போதைக்கு புதிய கட்சிகள் சேராது - கருணாநிதி

கோவை: திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இப்போதைக்கு சேராது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கோவையில் நேற்று தொடங்கிய வேளாண் அறிவியல் நிலையங்களின் தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட அவர் மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், முதல்வர் அளித்த பதில்களும்..

கேள்வி: உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, கோவையில் நடைபெறவிருப்பதையொட்டி?

பதில்: தொடக்க கட்ட வேலைகள் எல்லாம் ஆரம்பிக்கப்பட்டு உலகம் எங்கும் பல்வேறு நாடுகளில் உள்ள அறிஞர்களோடு தொடர்பு கொண்டு மாநாட்டில் அவர்கள் எல்லாம் பங்குபெற வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல அறிஞர்கள் நம்முடைய அழைப்பை ஏற்று ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள். மாநாடு நடைபெறும் இடமான கோவையில் உள்ள மாவட்ட ஆட்சி தலைவருடைய மேற்பார்வையிலும், மற்ற பகுதிகளில் ஆங்காங்கு இருக்கின்ற மாவட்ட ஆட்சியர்களுடைய மேற்பார்வையிலும் மாநாட்டு பணிகள் நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் குறிப்பாக மாநாடு நடைபெறுகின்ற கோவை அருகில் உள்ள நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்ட மக்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளத் தோழர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் என அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று உங்கள் மூலமாக இன்று நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

கேள்வி: கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதால், கோவைக்கு சிறப்பு கட்டமைப்பு பணிகள் ஏதாவது செய்யப்படுமா?

பதில்: நிச்சயமாக கோவை மாநகரிலும், இதனையொட்டிய பகுதிகளிலும் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். ஏற்கனவே கழக ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் டைட்டல் பூங்கா- கூட்டுக்குடிநீர் திட்டங்கள்- பாதாள சாக்கடை திட்டம் போன்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த செம்மொழி மாநாட்டையொட்டியும் பல உள் கட்டமைப்பு பணிகள் நிச்சயமாக மேற்கொள்ளப்படும்.

கேள்வி: செம்மொழி மாநாட்டிற்கு மத்திய அரசின் நிதி வருமா?

பதில்: இப்போது மத்திய அரசு கொடுக்கின்ற நிதியாக கருணா`நிதி'தான் இருக்கிறேன்.

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு அழைப்பு..

கேள்வி: மாநாட்டிற்கு பிரதமரை அழைப்பீர்களா?

பதில்: ஏற்கனவே நடைபெற்ற மாநாடுகளிலே அறிஞர் அண்ணா அவர்கள் முதல்-அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற மாநாட்டிற்கு அப்போது குடியரசு தலைவராக இருந்தவர் அழைக்கப்பட்டு கலந்துகொண்டார்.

அதுபோல இந்த மாநாட்டிற்கும் குடியரசு தலைவர், பிரதமர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை அழைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

கேள்வி: தமிழில் "நன்னூல்'' போன்ற இலக்கண நூல்களைப் போல வேறொன்று வர மாநாட்டில் முயற்சி மேற்கொள்ளப்படுமா?

பதில்: செம்மொழி மாநாடு அதற்கான அடித்தளமாக அமையக்கூடும்.

கேள்வி: ரேஷன் கடைகளில் பருப்பு விலை அதிகமாயிருக்கிறதே?

பதில்: அதை நான் மறுக்கவில்லை. ஆனால் நம்முடைய தமிழக அரசை பொறுத்தவரையில் எந்த அளவிற்கு வாங்கக்கூடிய மக்களுக்கு அவர்களுடைய சுமையை குறைக்க முடியுமோ, அந்த அளவிற்கு உணவு தானிய பொருட்களுக்கு மானியம் வழங்கி, பொது விநியோகத்தில் விலைவாசியை குறைக்கும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கேள்வி: மத்திய வேளாண் மற்றும் உணவுத்துறை அமைச்சரை சந்தித்தது பற்றி?

பதில்: ஒரு ஆண்டுக்கு 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் உணவு மானியமாக வழங்கப்பட்டு தமிழகம் முழுவதும் பொது வினியோகத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்துக்கு தேவையான 1 லட்சத்து 80 ஆயிரம் டன் அரிசியை குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. மாநில அரசின் இந்த கோரிக்கையை பரிவுடன் பரிசீலனை செய்ய வேண்டும் என்று இன்று இந்த மாநாட்டு நிகழ்ச்சி முடிந்து மத்திய மந்திரியோடு பேசும்போது வலியுறுத்தி கேட்டுக்கொண்டேன்.

கேள்வி: அவினாசி, அத்திக்கடவு திட்டம் குறித்து நியமிக்கப்பட்ட மோகன கிருஷ்ணன் குழு அறிக்கை கொடுத்து விட்டதே? என்ன பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது?

பதில்: அதில் அந்த திட்டத்துக்கு எதிர்ப்பான கருத்து எதுவும் இல்லை. அதை நடைமுறைப்படுத்தலாம் என்ற நல்ல கருத்து தான் சொல்லப்பட்டு இருக்கின்றது. அந்த அறிக்கை ஆய்விலே உள்ளது.

கேள்வி: கரும்பு கொள்முதல் விலையை அதிகப்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை பற்றி?

பதில்: மத்திய அரசு ஏற்கனவே ஒரு டன் கரும்புக்கு நிர்ணயித்த விலை ரூ.1,077.60. இப்போது அதிகப்படுத்தியிருப்பது ரூ.220.80, இரண்டையும் சேர்த்தால் ரூ.1.298.40. மத்திய அரசின் இந்த விலையை விட தமிழக அரசில் அதிகமாகத்தான் இப்போது கொடுத்து கொண்டு இருக்கிறோம்.

தமிழக அரசு ஏற்கனவே நிர்ணயித்துள்ள விலை ரூ.1,437.40. இது தவிர வண்டி வாடகை பிழி திறன் ரூ.112.60. ஆகவே தமிழக அரசின் விலை இப்போது கொடுப்பது ரூ.1550. இது தற்போது அரசு நிர்ணயித்து உள்ள விலையை விட அதிகம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

என் மீது குற்றம் இல்லை...

கேள்வி: சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் நடைபெற்ற பிரச்சினை குறித்து நீதிமன்றம் காவல்துறையினர் மீது குற்றஞ்சாட்டிய போதிலும், அரசும் முதல்-அமைச்சரும் தான் அதற்கு பொறுப்பு ஏற்கவேண்டுமென்று எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா அறிக்கை விடுத்திருக்கிறாரே?

பதில்: சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய தீர்ப்பில் அல்லது அறிவிப்பில் நடைபெற்ற அந்த நிகழ்வில் எந்தக்குற்றச்சாட்டையும் அரசின்மீது அந்த தீர்ப்பில் சுட்டிக்காட்டப்படவில்லை.

மாறாக மருத்துவமனையிலே இருந்து கூட முதல்-அமைச்சர் கடிதம் மூலம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியோடு தொடர்பு கொண்டு அக்கறையோடு விசாரித்து ஆவன செய்திருக்கிறார் என்று என்னையும், அரசின் அதிகாரிகளையும், குறிப்பாக உயர்மட்ட அலுவலாளர்களையும், தலைமைச்செயலாளர் போன்றவர்களையும் பாராட்டியிருக்கிறார்களே தவிர, எங்கள் மீது அவர்கள் குறை கூறி, குற்றஞ்சாட்டவில்லை.

ஆனால் இப்போது இதற்கெல்லாம் நாங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம் ஆகியவற்றின் நீதிபதிகளின் மூலம் குற்றச்சாட்டு கூறப்பட்டபோது முன்னுதாரணமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதுபற்றி 25.2.2006 அன்று இந்து போன்ற பத்திரிகைகளிலேயே விமர்சனம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இன்னொரு உதாரணம் கூற வேண்டுமேயானால்- 2005-ம் ஆண்டு இறுதியில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அன்றைய அரசு ஏற்பாடு செய்திருந்தது. அப்போது அந்த உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் ஒருவர் அல்ல, இருவர் அல்ல 42 பேர் நசுங்கி செத்தார்கள்.

அந்த சம்பவத்திற்கு காரணமே, தி.மு. கழகத்தின் பகுதிச் செயலாளரும், சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினருமான தனசேகரன் என்பவர் பரப்பிய வதந்திதான் என்று அரசின் சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த தனசேகரன் கைது செய்யப்பட்டார். அவரை சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தபோது, அன்றைய அம்மையார் அரசு அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலே அடைத்தது.

மேலும் தனசேகரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அப்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிலே குறிப்பிட்ட கருத்தை 28.1.2006 தேதிய `இந்து' இதழிலும், மற்றும் அனைத்து ஏடுகளிலும் வெளியிட்டு இருந்தனர். அரசே பொறுப்பு என்று அப்போது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் என்று எல்லா நீதிமன்றங்களும் சொன்ன சமயத்திலும் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அந்த நேரடி குற்றச்சாட்டுகளையே பொருட்படுத்தாமல் இருந்தார் என்பதையும் இப்போது அரசின் மீதும், அமைச்சர்கள் மீதும் எத்தகைய குற்றச்சாட்டும் கூறாத நிலையில் நான்கு காவல்துறை அதிகாரிகள் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சொல்வது பொருத்தமுடையதல்ல.

கேள்வி: முல்லைப் பெரியாறு பிரச்சினையிலே அங்கே மத்திய அரசின் காவல் படையினரை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் வைத்தகோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதா?

பதில்: அடிக்கடி கேரள அரசின் அதிகாரிகள் நம்முடைய நடவடிக்கைகளை சட்ட பூர்வமான செயல்பாடுகளை கூட அந்த பகுதியில் தடுக்கின்ற காரணத்தால் இரண்டு, மூன்று முறை மத்திய அரசுக்கு குறிப்பாக பிரதமருக்கு அந்த நிலையை சுட்டிக்காட்டி, மத்திய அரசின் பாதுகாப்பு வேண்டும் என்று கோரப்பட்டு இருக்கிறது. இதற்கு இன்னும் உரிய பதில் கிடைக்கவில்லை.

உளறலுக்கு விளக்கம் தர முடியாது...

கேள்வி: மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் ஒருவர், முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக தி.மு.க எதிர்ப்பு குரல் கொடுத்தால் தி.மு.கவுக்கு எதிராக நாங்கள் எதிர்குரல் கொடுப்போம் என்று சொல்லி இருக்கிறாரே?

பதில்: சோனியா காந்தி, பிரதமர் போன்ற பெரிய தலைவர்கள் யாராவது இதை பற்றி சொல்லி இருந்தால் நான் விளக்கம் சொல்ல முடியும். உளறலுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.

கேள்வி: காஞ்சீபுரம் மாநாட்டில் இலங்கை அகதிகளுக்கு வாழ்வுரிமை வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருந்தீர்கள். அதை மத்திய அரசு கவனித்தார்களா?

பதில்: அதைப்பற்றி அனுதாபத்தோடு மத்திய அரசினர் அணுகி உள்ளனர். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடத்திலும், சோனியா காந்தி இடத்திலும் அந்த தீர்மானத்தை எடுத்து காட்டி ஆதரவு கோரி இருக்கிறார்கள். அவர்களும், அனுதாபத்தோடு இது கவனிக்கப்பட வேண்டியது தான் என்பதை ஒப்புக்கொண்டு சட்டப்பிரச்சினைகளையெல்லாம் ஆய்ந்து முடிவு எடுக்கலாம் என்று கூறி உள்ளனர்.

கேள்வி: தமிழகத்திலே இலங்கை அகதிக்காக 115 முகாம்கள் இருக்கின்றன. தற்போது ஒதுக்கியுள்ள 12 கோடி ரூபாய் இவர்களுக்கு போதுமா?

பதில்: வருகின்ற 10-ந் தேதிக்குள் இந்த முகாம்களைப் பார்வையிட்ட அமைச்சர்கள் அவர்களுடைய அறிக்கைகளைத் தருவார்கள். அந்த அறிக்கைகளை வைத்து மேலும் என்ன உதவிகள் செய்யலாம் என்று முடிவெடுக்கப்படும்.

கேள்வி: அமைச்சரவையில் மாற்றம் இருக்கிறதா? பொதுப்பணித்துறையை இரண்டாக பிரிக்கின்ற எண்ணம் இருக்கிறதா?

பதில்: அப்படி எதுவும் கிடையாது.

கேள்வி:- தி.மு.க கூட்டணியில் புதிய கட்சிகள் வரும் வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: அப்படி எந்த வாய்ப்பும் இப்போதில்லை என்றார் கருணாநிதி.


User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: கிண்டி சிவா
பதிவு செய்தது: 08 Nov 2009 12:22 pm
அப்பாடா, பா ம க பழைய கட்சி ரொம்ப சந்தோசம். திரும்ப கூட்டணி அமைச்சு அத நல்ல கட்சின்னு சான்றிதழ் குடுத்துட்டா அடுத்த முறை ஜெயுசுடலாம்.

பதிவு செய்தவர்: VAIKO
பதிவு செய்தது: 07 Nov 2009 3:48 pm
மு க ஸ்டாலின் , அண்ணன் அழகிரி தலமையில் இனி தமிழ்நாடு தமிழன் கையில் வரும்.

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India