சென்னை: ஹேமலதா என்ற பெண் கொடுத்த கற்பழிப்புப் புகாரின் பேரில் பெங்களூரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஹேமலதா என்பவர் போலீசில் கொடுத்த புகாரில் தன்னை சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் கற்பழித்துவிட்டதாகவும், ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.
கிட்டத்தட்ட 50 முறை தன்னை சாமியார் கற்பழித்ததாக ஹேமலதா கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஸ்ரீகுமாரை விசாரிக்க பலமுறை போலீஸார் அழைத்தும் அவர் வரவில்லை. ஊர் ஊராக மாறி ஓடிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், தனிப் படை போலீஸார் பெங்களூரில் தலைமறைவாக இருந்த சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாரை விசாரணைக்காக கைது செய்து சென்னை கொண்டுவந்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது ஹேமலதாவை நான் கற்பழிக்கவில்லை. அது தொடர்பான ஆபாச சிடியும் என்னிடம் இல்லை. எனது மனைவிக்கும், எனக்கும் கை, கால் பிடித்து மசாஜ் செய்து உள்ளார். அவ்வளவுதான் என்று கூறினார்.
இதை தொடர்ந்து போலீசார் சாமியார் முன்னிலையில் நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள வீடு, அடையாறு பகுதியில் உள்ள அவரது அறக்கட்டளை அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு ஆபாச சிடியோ, போட்டோவோ ஏதும் கிடைக்கவில்லை. மாறாக சிறுத்தை புலி தோல் ஒன்று கிடைத்தது.
அதைப் பற்றி சாமியாரிடம் போலீசார் கேட்டபோது தென் ஆப்பிரிக்காவில் உள்ள தனது நண்பர் ஒருவர் தனக்கு அந்த புலிதோலை அன்பளிப்பாக கொடுத்ததாக கூறி உள்ளார்.
புலித்தோலை வைத்திருப்பது இந்தியாவில் சட்டவிரோதமாகும். எனவே சட்டவிரோதமாக புலிதோலை அவர் வீட்டில் வைத்து இருந்ததாக போலீசார் சாமியாரை கைது செய்தனர்.
அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று இரவு புழல் சிறையில் அடைக்க கொண்டு சென்றனர்.
அப்போது திடீரென சாமியார், தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு இன்று ஈசிஜி எடுக்கப்பட்டது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவரின் ஆலோசனையைக் கேட்ட பின்னர் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.