வாரணாசி: ருசிகா கற்பழிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட மாஜி டிஜிபி ரத்தோரை சரமாரியாக குத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள உ.பி. இளைஞர் உத்சவ் சர்மாவுக்கு மன அழுத்தம் இருப்பதாகவும், இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
சண்டிகர் கோர்ட்டில் நேற்று விசாரணைக்காக வந்து திரும்பிய ரத்தோரை, திடீரென பாய்ந்து சரமாரியாக முகத்தில் குத்தினார் உத்சவ். அவரது கையில் கத்தியும் இருந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் கத்தியால் ரத்தோரைக் குத்தததால் உயிர் தப்பினார் ரத்தோர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உத்சவ் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்சவின் தந்தை சுஷில் குமார் சர்மா, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
தனது மகனின் செயல் குறித்து அவர் கூறுகையில், கடந்த ஆறு மாதங்களாக மன அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார் உத்சவ். அசாதாரணமான சூழல் காரணமாகவே இவ்வாறு அவர் நடந்து கொண்டிருக்கலாம் என கருதுகிறேன்.
அநீதி நடந்தால் அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார் உத்சவ். அனைத்தும் நியாயமாக இருக்க வேண்டும் என நினைப்பார். அதுகுறித்துத்தான் பேசிக் கொண்டிருப்பார். அதுதான் இப்படி அவரை நடந்து கொள்ள தூண்டியிருக்க வேண்டும் என கருதுகிறேன்.
ஆனால் சட்டத்தை யாரும் கையில் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது. அதற்கு யாருக்கும் உரிமையும் கிடையாது.
உடல் நல ரீதியாக எனது மகனுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்க நான் பாடுபடுவேன். அவருடைய மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட ஆவணங்களுடன் விரைவில் சண்டிகர் காவல்துறை அதிகாரிகளை நான் சந்தித்து விளக்கவுள்ளேன் என்றார்.