clear
clear
clear
x

அதி தீவிர தாக்குதல் வருகிறது-ஆப்கன் கிராமத்தினர் வெளியேறக் கூடாது என நேட்டோ எச்சரிக்கை

புதன்கிழமை, பிப்ரவரி 10, 2010, 9:19[IST]
Vote this article
Up  
Down  


காபூல்: தலிபான்களுக்கு எதிராக அதி தீவிர தாக்குதலை நடத்த நேட்டோ படையினர் தயாராகி வருகின்றனர். எனவே வரும் நாட்களில் தாக்குதல் நடைபெறப் போகும் கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறாமல் இருக்குமாறு நேட்டோ படையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானிலேயே வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக கருதப்படும் ஹெல்மான்ட் பகுதி, முற்றிலும் தலிபான்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒன்றாகும். பிற பகுதிகளில் தலிபான்கள் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டு விட்டனர் அல்லது வலுவிழந்து போய் விட்டனர்.

இந்தநிலையில் தலிபான்கள் முழு பலத்துடன் இருக்கும் ஒரே பகுதியான இந்தப் பிராந்தியத்தின் கீழ் வரும் மர்ஜா என்ற இடத்தைப் பிடிக்க மாபெரும் தாக்குதலை நடத்த அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப் படையினர் திட்டமிட்டு, ஆயத்தமாகி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கான படையினரும், ஏவுகணைகளும், இந்த தாக்குதலில் ஈடுபடவுள்ளனர்.

அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானில் காலெடுத்து வைத்து எட்டு ஆண்டுகள் ஆகிறது. இத்தனை ஆண்டுகளில் இல்லாத வகையிலான மிகப் பெரும் தாக்குதலாக இது இருக்கும் என வர்ணிக்கப்படுகிறது.

மேலும் ஒபாமா அதிபர் பொறுப்பேற்ற பின்னர் அமெரிக்கப் படையினர் பெரும் தாக்குதலில் ஈடுபடப் போவதும் இதுவே முதல் முறையாகும்.

மேலும் 2011ம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானை விட்டு விலக அமெரிக்கா முடிவு செய்துள்ளது. எனவே அதற்குள் தலிபான்களை முழுமையான அளவில் பலவீனப்படுத்தி விட அமெரிக்கப் படையினர் ஆர்வமாக உள்ளனர்.

மேலும் தலிபான்களின் கொட்டத்தை முழுமையாக அடக்கி, அவர்களை ஆயுதங்களைக் கீழே போடச் செய்வதில் நேட்டோ படையினரும் முழு தீவிரத்தில் உள்ளனர்.

இந்த நிலையில்தான் தற்போது பெரும் தாக்குதலுக்கு அமெரிக்கப் படையினர் தயாராகியுள்ளனர். இதனால் வரும் நாட்களில் தாக்குதல் நடக்கப் போகும் சமயங்களில் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு நேட்டோ எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். மர்ஜா பகுதியில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வரை இருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியை விட்டு வெளியேறாமல் உள்ள மக்கள், அடுத்து என்ன நடக்குமோ என்ற பெரும் பீதியில் உள்ளனர்.

மக்கள் பாதுகாப்புக்கான நேட்டோ பிரதிநிதி மார்க் செட்வில் கூறுகையில், மக்களுக்குத் தேவையான உணவு, இருப்பிட வசதி, தப்பிச் செல்லும் பாதைகள் உள்ளிட்டவை ஏற்கனவே போதிய அளவுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.

எத்தனை பேருக்கு அடைக்கலம் கொடுக்கப்படும், உணவுப் பொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இப்போது தெரிவிக்க முடியாது. இருப்பினும் எத்தகைய நிலை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க ஆயத்த நிலையி்ல் இருக்கிறோம்.

இந்தப் பகுதியிலிருந்து யார் வெளியேறினாலும் அவர்களுக்கு பாதுகாப்பான இருப்பிடம் அளிக்கப்படும் என்றார்.

ஹெல்மான்ட் மாகாண ஆளுநர் குலாப் மங்கல் கூறுகையில், இதுவரை 164 குடும்பத்தினர் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களை சமாளிக்க தனியாக ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மர்ஜாவின் மீது நடத்தப்படவுள்ள தாக்குதல் முன்பு நடந்ததைப் போல இல்லாமல் மின்னல் வேகத்தில் நடத்தி முடிக்கப்படும் என நேட்டோ கூறுகிறது. பெருமளவில் அப்பாவி மக்கள் உயிரிழந்து விடாமலும் கவனமாக இருக்குமாறு படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை பல மாதமாக நேட்டோ படையினர் திட்டமிட்டு வந்தனராம். அனைத்து விதமான சாத்தியக் கூறுகளையும் கணக்கிட்ட பின்னரே தற்போது தாக்குதலுக்கு நேட்டோ ஆயத்தமாகியுள்ளதாம்.

பெருமளவிலான உயிரிழப்பைத் தடுக்க தலிபான்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடையுமாறு நேட்டோ வலியுறுத்தி வருகிறது. இது வெற்றி பெற்றால் மர்ஜா மீதான தாக்குதலே தேவைப்படாது என்றும் அது கூறுகிறது.

ஆனால் இதுவரை தலிபான் தரப்பிலிருந்து யாரும் சரணடையவில்லை. மாறாக அப்பாவி மக்கள் தான் படிப்படியாக மர்ஜாவை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அதேசமயம், தலிபான்கள், நேட்டோவின் தாக்குதல் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதை சமாளித்து தாக்குவது என்ற முடிவில் உள்ளனராம். அதற்கேற்ற நடவடிக்கைகளில் அவர்கள் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் பிராட் ஆடம்ஸ் கூறுகையில், சர்வதேச சட்டப்படி, போர் பாதித்த பகுதியிலிருந்து வெளியேறும் அப்பாவி மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை நேட்டோ செய்து கொடுத்தாக வேண்டும்.

ஆனால் பொதுமக்கள் வெளியேறத் தேவையில்லை என்று நேட்டோ கூறுவது எனக்கு கவலை தருகிறது. போராட்டக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை எப்படி அவர்கள் உணர்வார்கள் என்று தெரியவில்லை. குறிப்பாக விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தும்போது எப்படி அப்பாவி மக்களை இனம் கண்டறிந்து தாக்குதலைத் தவிர்க்க முடியும் என்று புரியவில்லை.

அவர்கள் எது செய்தாலும் அதில் அப்பாவி மக்கள் சிக்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது அவர்களது பொறுப்பும் கூட என்றார் ஆடம்ஸ்.



User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

Book Your Flight Tickets on Oneindia.in
படிக்கவில்லையா?
தற்போதைய செய்திகள்
Tapasee தபசி
Pacchai Enginra Kaathu பச்சை என்கின்ற காத்து
Gokulam கோகுலம்